வாழ்த்துச் செய்தி
இலங்கை என்பது வரலாற்றுக் காலம் தொடக்கம் பல சிவ ஸ்தலங்களைக் கொண்ட நாடாக சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் சிலாகிக்கப்படுகின்றது. சிங்கள இதிகாசமான மகாவம்சம் கூறும் விஜயன் இந்த நாட்டுக்கு வந்தபொழுது இங்கு ஐந்து ஈஸ்வரங்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. வடக்கே யாழ்ப்பாணத்தில் நகுலேஸ்வரமும், கிழக்கே திருகோணமலையில் கோணேஸ்வரமும், மேற்கே மன்னாரில் திருக்கேதீஸ்வரமும், தெற்கே காலியில் தொண்டீஸ்வரமும், சிலாபத்தில் முன்னேஸ்வரமும் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அவ்வளவு பெருமைபெற்ற ஈழத்தின் வடபுலமானது சைவத் திருத்தலங்கள் நிறைந்த ஆன்மீக விருத்திபெற்ற பிரதேசமாக விளங்கி வருகின்றது. சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றும் மக்கள் வாழும் இப் பிரதேசத்தில், எமது சமயத்தையும் மொழியையும் அழிக்கும் பல்வேறுபட்ட படையெடுப்புக்கள் பல்வேறுபட்ட காலங்களில் நடந்தது. பிரித்தானியர் காலத்தில் ஆறுமுகநாவலர் தமிழையும் சைவத்தையும் பாதுகாத்து அதற்கோர் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தினார். பல்வேறு பட்ட படையெடுப்புகள் மத்தியிலும், தமிழும் சைவமும் இன்னும் தலைநிமிர்ந்து நிற்பதில் தாம் பெருமை கொள்ளவேண்டும்.
இவ்வாறு புகழ்பெற்ற வரலாற்றுப் பெருமைமிக்க யாழ். மண்ணில், தெற்கே அருள் மிகு நல்லூர் கந்தசுவாமி கோவிலையும், வரலாற்றுப் புகழ்மிக்க சட்டநாதர் சிவன்கோவிலையும், கிழக்கே கட்டப்பிராய் முத்துமாரி அம்மன் எனும் சக்தி கோவிலையும், வடக்கே இருபாலை கற்பக விநாயகரும் சூழ அருட்செல்வங்களும் பொருட் செல்வங்களும் மிக்க கல்வியங்காட்டில் எழுந்தருளி அருள்பாலிக்கும் வீரபத்திரர் கோவிலின் இராஜகோபுர குட முழுக்கு திருவிழா நடைபெற இருப்பதானது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.
எமது கிராமத்தின் பழம்பெரும் கோவில்களில் ஒன்றும், எமது நீண்டகால வணக்கத்துக்குரியதுமான ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம், சித்திரத்தேர் மற்றும் ராஜகோபுரத்துடன் புதுப்பொலிவும், கம்பீரமும் கொண்டதுமாக வளர்ச்சி அடைந்துள்ளதில் இக்கிராமத்து மக்களில் ஒருவனாக மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
தம்மைக் காக்கும் தெய்வத்திற்கு ராஜகோபுரம் அமைத்து குட முழுக்கு நடைபெற இருப்பதானது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது. அத்துடன் இக்குடமுழுக்கு விழா சிறப்புற நடந்தேறி அடியார்கள் வீரபத்திரரின் அருள்பெற வாழ்த்துவதில் மிகமிக மனநிறைவடைகின்றேன்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் பா.உ
0 கருத்துகள்
வீரபத்திரர் பற்றிய கதைகள் உங்களது கட்டுரைகள் கவிதைகள் எமது இணையத்தளத்தில் வர விரும்பின் எமது Gmail முகவரிக்கு உங்கள் பெயரை இட்டு அனுப்பி வைக்கவும்.