-->

திருவிழாக்களின் தத்துவம்!

 திருவிழாக்களின் தத்துவம்!

ஆதியும் அந்தமுமில்லா பரம்பொருள் உலகோர்க்கு அருள் செய்யும் வண்ணம், தன் அருவ நிலையிலிருந்து இறங்கி இப்பூவுலகில் ஆங்காங்கு பல தலங்களில் அருவுருவத் திருமேனியான சிவலிங்க வடிவம் கொண்டும், உருவத் திருமேனியாக பல மூர்த்திகளின் வடிவம் கொண்டும் அருள்பாலித்து வருகிறது.


ஆலயங்களில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கு நித்திய வழிபாடு களும், திருவிழாக் காலத்தில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.


திருவிழா நாட்களில் கொடி யேற்றம் முதல் கொடியிறக்கம் வரை உற்சவமூர்த்திகளை வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளச் செய்து கோவில் பிராகாரங்களிலும் வீதிகளிலும் உலாவரச் செய்வர். இதனால் கோவிலுக்கு வர இயலாதவர்களும் இருந்த இடத்திலிருந்தே மூர்த்திகளை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டுகிறது.


திருவிழா தொடங்குவதற்கு முன்பாக மண் எடுத்தல், முளையிடுதல் ஆகியவை நடைபெறும். திருவிழாவின் முதல் நாள் துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றம் நடைபெறும். அந் தந்த ஆலயத்தில் அருள்பாலித்து வரும் மூர்த்தியின் வாகன உருவத்தை ஒரு கொடியில் எழுதி, கொடிமரத்தில் கயிறு கொண்டு மேலேற்றுவர். சிவாலயமெனில் ரிஷபக் கொடியும், முருகன் கோவிலெனில் சேவல் கொடியும், பெருமாள் கோவிலெனில் கருடக்கொடியும் ஏற்றப் படும். தர்மம், ஆத்மா ஆகிய இரண்டின் வடிவமாகக் கொடி கருதப்படுகிறது. தர்மத்தையும், மும்மலங்களில் கிடந்துழலும் உயிர்களையும் மேல்நிலைக்கு உயர்த்தும் இறைவனின் கருணையே கொடியேற்றத்தின் மூலம் விளக்கப்படுகிறது.


திருவிழாக்களின் தத்துவம்! 


தேவலோகத்திலுள்ள ஐந்து மரங்களில் ஒன்று கற்பக மரம். நினைத்ததைத் தரக்கூடிய இம்மரத்தின்கீழ் சிவபெருமான் வீற்றிருந்து அருள்வதை விளக்குவது விருட்ச வாகனம். அடியார்கள் நினைத்ததை இறைவன் கற்பக மரம்போன்று நிறைவேற்றுவான் என்பதையே விருட்ச வாகனம் உணர்த்துகிறது.


சூரிய பிரபை, சந்திரப் பிரபையில் எழுந்தருள்வது, இறைவன் சூரிய சந்திரர்கள் மூலம் மக்களுக்கு அருள்பாலிக்கும் தன்மையைக் குறிக்கிறது. சூரியன் உலகத்திற்கு வெப்பம், மழை ஆகியவற்றை அளித்து, நவதானியங்களை விருத்தி செய்கிறான். சந்திரன் தன் குளிர்ச்சியான ஒளிக்கதிர்கள் மூலம் உலகிற்கு இன்பம் அளிப்பவன். சூரிய வெப்பத்தால் உலகோர்க்கு வளத்தையும், சந்திரனின் தண்ணொளியால் அமைதியையும் அளித்துக் காக்கும் இறைவனின் கருணையையே இது விளக்குகிறது. 


இறைவனுக்கு பல பூதகணங்கள் உண்டு. நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு என்ற ஐம்பூதப் பொருள்களாகவும்; ஐம்பூதங்களின் பரிணாம உருவான உடலை இயக்குகின்றவனாகவும் இறைவன் விளங்குகிறான் என்பதை உணர்த்துவது பூத வாகனம்.


நான்கு தோள்கள், மான், மழு, முக்கண்கள் கொண்டு சாரூபப் பதவி பெற்றவர் அதிகார நந்தி. திருக்கயிலையின் வாயில் காவலராக விளங்கும் இவரது அனுமதி பெற்றே சிவபெருமானை தரிசிக்கவேண்டும். இவரது பெருமையை விளக்கும் விதமாகவே இறைவன் நந்தி வாகனத்தில் எழுந்தருள்கிறார்.


சர்வசம்ஹார காலத்தில் எல்லாப் பொருட்களும் அழிந்துவிட, தர்மதேவதையாகிய அறக்கடவுள் தான் அழியாதிருக்கும் பொருட்டு வெண்மை நிறக் காளை வடிவெடுத்து தன்னை இறைவனின் வாகனமாக்கிக் கொள்ளும். இறைவன் தர்மத்தின் வடிவாக விளங்குகிறார்என்பதையே அம்மையப்பராக காளையின் மேல் வீற்றிருந்தருளும் கோலம் உணர்த்து கிறது.


ஆணவத்தின் குறியீடாகவும், அடக்கமுடியாத ஐந்து இந்திரியங்களின் குறியீடாகவும் யானையைக் குறிப்பிடுவர். இறைவன் யானைமீது அமர்ந்து வருவதானது- அருளென்னும் அங்குசத்தால் உயிர்களின் ஆணவத்தையும், இந்திரியங்களின் செயல்பாடுகளையும் அடக்குவதைக் குறிக்கிறது. பாகன் காலால் இடும் வேலையை யானை தலையால் அறிந்து செய்வதுபோல, இறைவன் உயிர்களுக்குப் பரிபாகனாய் இருந்து திருவடி ஞானத் தால் அறிவிக்கும் குறிப்புகளை, உயிர்கள் அறிந்து செயல்பட வேண்டுமென்பதைக் குறிக்கிறது.


இராவணனின் உடம்பின் மேலுள்ள கயிலை மலையில் இறைவன் எழுந்தருள் வதைக் குறிப்பது கைலாச வாகனம். இராவணன்- ஆணவமலம் நிறைந்த உயிர்; கயிலாய மலை பிரபஞ்சம். இராவணன் தன் ஆணவத்தால் கயிலை மலையைத் தூக்குவதென்பது- ஆணவம் பிரபஞ்சத்தை அறிந்து இன்புற முயல்வதைக் குறிப்பதாக உள்ளது. சிவபெருமான் தன் கால் கட்டைவிரலால் மலையை அழுத்தியபோது, ஆணவம் அழிந்த இராவணன் சாமகானம் பாடி இறைவன் அருளைப் பெற்றான். அதாவது ஆணவமலம் நிறைந்த உயிர் இறுதியில் ஆணவத்தை இழந்து, கடவுளை தியானித்து அவன் திருவடிகளை அடைகிறதென்பதை இது உணர்த்துகிறது.


விலங்குகளில் வேகமுடையது குதிரை. மனித மனமும் அதிவேகமுடையதாக இருப்பதால் இரண்டையும் ஒப்பிடலாம். குதிரையின்மீதேறி அதை அடக்குவதுபோல், வேகமாகச் செல்லும் மனக்குதிரையையும் அடக்கவேண்டும் என்பதையே குதிரை வாகனம் விளக்குகிறது. வேதமாகிய குதிரையில் இறைவன் எழுந்தருள்கிறான் என்பதைக் குறிப்பதாகவும் ஒரு கருத்துண்டு.


ஆணும் பெண்ணும் செய்துகொள்வது கல்யாணம்; இறைவனும் இறைவியும் செய்துகொள்வது திருக்கல்யாணம்.


உலகத்து உயிர்கள் சிற்றின்பத்தைக்கொண்டே பேரின்பத்தை அடைய வேண்டுமென்பதற்காக, உயிர்களுக்கு போகத்தை அருளும் பொருட்டு இறைவன்- இறைவி திருமணம் நடைபெறுகிறது. பக்தியில் பக்குவப்பட்ட உயிர்களாகிய பெண்களை, இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிகிறான் என்பதையே திருமணச் சடங்கு உணர்த்துகிறது.


தாருகாவனத்து முனிவர்களும், முனி பத்தினிகளும் ஆணவ மலத்தால் இறைவனைமறந்தனர். இதனை அவர்களுக்கு உணர்த்துதற் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனர் வடிவத்திலும், திருமால் மோகினியாகவும் தாருகாவனம் சென்றனர். முனிவர்கள் மோகினியின் அழகிலும், முனிபத்தினிகள் பிட்சாடனர் வடிவிலும் மயங்கினர். 


இவ்வாறு அவர்கள் தங்கள் நிலைபிறழ்ந்து நின்றபோது தங்கள் தவறையுணர்ந்து இறைவனிடம் பக்தி பூண்டொழுகினர். இவ்வனுக்கிரகக் கோலமே பிட்சாடனர் திருக்கோலமாக திருவிழாவில் காட்சி தருகிறது.


சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது தேரில் சென்று அசுரர்களைக் கொன்று தேவர்களைக் காத்தார் என்பது வரலாறு. தேவர்கள் தேரின் அங் கங்களாக இடம்பெற்றனர். சிவபெருமான் புறப் பட்டபோது, தங்கள் உதவியால்தான் இறைவன் திரிபுரத்தை எரிக்கப் போகிறார் என்று ஆணவம் கொண்டனர். இதனையுணர்ந்த சிவபெருமான், பல போர்க்கருவிகளுடன் சென்றிருந்தாலும் தன் புன்னகையாலேயே முப்புரங்களையும் எரித்து தேவர்களின் ஆணவத்தை அடக்கினார்.


முப்புரங்களையும் எரித்ததென்பது உட்பகை களாகிய ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங் களையும் சுட்டெரித்தல் என்பதையே குறிக்கிறது.


தீர்த்தவாரி என்பது பரிசுத்தப்படுத்துவதைக் குறிக்கும். தீர்த்தவாரியன்று நடராஜர் வீதியுலா வருவது பஞ்ச கிருத்தியங்களைக் குறிக்கும். படைப்புத் தொழிலை உடுக்கையும், காத்தலை அபயகரமும், அழித்தலை அக்னியும், அருளலை தூக்கிய திருவடியும், மறைத்தலை ஊன்றிய பாதமும் குறிக்கின்றன. ஆக, நடராஜரின் திருவுருவம் இறைவனின் ஐந்தொழில்களைக் குறிப்பதாக அமைந்துள்ளது.


உற்சவர் ஆறு அல்லது திருக்குளத்திற்குச் சென்று தீர்த்தவாரி நடைபெறும்போது, பக்தர்களும் நீராடி அகமும் புறமும் தூய்மை யடைந்து இன்புறுவர். இவ்வாறு இறையின்பவாரியில் ஆன்மாக்கள் ஆழ்ந்து ஆனந்திப்பதை தீர்த்தவாரி உணர்த்துகிறது.


அழகாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இறைவியுடன் இறைவன் எழுந்தருளி, 5, 7, 9 என ஒற்றைப் படை எண்ணிக்கையில் சுற்றிவந்து, குளத்தின் மைய மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சிதருவது தெப்போத்சவம்.


பிறவிக்கடலில் அமிழ்ந்து கரை காணமுடியாமல் உழலும் உயிர்களை, இறைவன் அருளாகிய தெப்பத்திலேற்றி முக்தியாகிய கரையில் சேர்க்கிறான் என்பதையே இது குறிக்கிறது.


இவ்வாறு கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள் பல தத்துவங்களை உள்ளடக்கியதாக உள்ளன. அவற்றை அறிந்துகொண்டு திருவிழாக்களைக் கண்டுகளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்