-->

மாசி மகம் 27/02/2021 - பாவங்கள் போக்கும் மகா புண்ணிய தினம்

மாசி மகம் என்றால் என்ன? மாசி மகம் புராண நிகழ்வுகள் தெரிந்து கொள்ளுங்கள்


மாசி மகம் என்பது மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியுடன் வரக்கூடிய மக நட்சத்திர நாளில் இந்துக்களால் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் சிறந்த நாளாகும். இந்த அற்புத தினத்தில் கடலாடும் விழா கொண்டாடப்படுகிறது.


பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் இந்த மாசி மக நட்சத்திரத்தன்று நீரை புண்ணிய தீீர்த்தமாக எண்ணி நீீராடி விரதமிருந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபடலாம்.


தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தெப்பத்தில் மாசி மகத் திருவிழா, மகாமகம் விழாவாக மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.


குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். அப்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு சிம்ம ராசியில் சஞ்சரிக்கக் கூடிய மாசி மகா நட்சத்திரத்தன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவங்களிலிருந்து விடுபட, பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாக ஐதீகம். இந்நாளில் கடலில் நீராடி இறைவனை வழிபடுவதாலும் நற்பேறு பெறலாம் என்பது நம்பிக்கை.

மாசி மகம் நட்சத்திரம் எப்போது?

அந்த அற்புதமான திருநாள் 27.02.2021 அன்று (சனிக்கிழமை) வருகின்றது.

26.02.2021 (வெள்ளிக்கிழமை) மதியம் 11.58 மணிக்கு மேல் மகம் நட்சத்திரம் வருகிறது.

மறுநாள் (27.02.2021) மதியம் 11.33 மணி வரை உள்ளது. மலை வலம் வருவதன் மூலம் மகத்தான பலன்களைப் பெற இயலும்.


​மாசி மகம் புராண நிகழ்வு 

ஒரு காலத்தில் வருண பகவானை பிரமஹத்தி தோஷம் பிடித்திருந்தது. அது அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. அதிலிருந்து விடுபட சிவ பெருமானை வேண்டினார். அவரும் வருணனை காப்பாற்றி அவரை விடுவித்த தினம். அதனால் இந்த தினத்தில் புண்ணிய நதி, குளங்களில் புனித நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் தீரும்.


​பார்வதி தேவி குறித்து கந்த புராணம்

ஒரு மாசி மக நந்நாளில் தட்ச பிரஜாபதி மற்றும் அவரது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் நீராடினார். அப்போது தாமரை மலரிலிருந்து ஒரு வலம்புரிச் சங்கை கண்டெடுத்தார். அதை பிரஜாபதி எடுத்த மாத்திரத்திலேயே அது ஒரு பெண் குழந்தை உருவாக ஆனது. இது சிவபெருமானின் அருளால் கிடைத்ததாக நினைத்து வேதவல்லியுடன் அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்து சென்று அம்பிகைக்கு தாட்சாயிணி என நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்து வந்ததாக குறிப்பிடப்படுகிறது.


இவ்வளவு சிறப்பு மிக்க நன்னாளில் நீங்களும் விரதம் இருந்து உங்கள் பாவங்களை அழித்தும், தானங்கள் செய்வதன் மூலம் உங்கள் புண்ணியங்களை அதிகரித்து சீரும் சிறப்போடும் நல்வாழ்வு வாழ்வீராக!


🙏நற்பவி🙏


கருத்துரையிடுக

0 கருத்துகள்