நாக தோஷம், ராகு கேது தோஷம் நீங்கி திருமணம் நடைபெற, புத்திர பாக்கியம் பெற மற்றும் புத்திரர் ஆரோக்கியத்திற்கு நாக சதுர்த்தி விரதம்
கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகால விஷத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்த நாள் கருதப்படுகிறது.
இந்நாளில் அட்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தோசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர். மற்றும் ராகு கேது தோஷங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நாகங்களை வழிபடுகின்றனர். நாகப்பிரதிநிதிகளுக்கு புது துணி கட்டி பாலால் அபிஷேகம் செய்கின்றனர். சிலர் அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீரெடுத்துவந்து அவைகளுக்கு அபிஷேகம் செய்கின்றார்கள்.
நாக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம்
ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன.
பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர்.
கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின.
அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும். மற்றும் புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.
ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மமாக கருதுகிறார்கள். அதுவே நாக சதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி. தங்கள் விருப்பம் போல் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.
விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள். இந்த நாக சதுர்த்தி நாளில் நாகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன
நாகசதுர்த்தி
நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவுடையவை. நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். துன்பங்களிலிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம். பாம்புகளின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ என்ற கொடிய நாகத்தால் பரிசட்த் என்ற மன்னன் கடிக்கப்பட்டு இறந்தான்.
தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இனத்தையே அழிக்க உறுதி செய்து, ‘சர்ப்பயக்ஞம்’என்ற வேள்வியை நடத்தினான். பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் நாக சதுர்த்தி தினமாகும். எனவே நாக விரதம் ஆடி மாத சதுர்த்தியில் கொண்டாடும் வழக்கம் தோன்றியது. முதல் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் ஆடி மாதத்தில் நாகசதுர்த்தி விரதத்தை தொடங்க வேண்டும். இந்த நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள். பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள். நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதில் உள்ள ராகு மற்றும் கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக இட்டுக் கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது. அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் மற்றும் முட்டைகள் வழங்கி வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள் யாவும் நீங்கும்.
சகல தோஷம் போக்கும் சர்ப்ப பூஜை
இந்து சமயத்தில் கலாசாரம், பண்பாடு, வழிபாடுகள், விரதங்கள், பண்டிகைகள் எல்லாமே இயற்கையை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்டவை. பஞ்ச பூதங்களாகிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், மற்றும் மலைகள், மரங்கள், விலங்குகள், பட்சிகளையும் தெய்வமாக கொண்டாடுகிறோம். யானை, கருடன், குதிரை உள்பட பல மிருகங்கள், பட்சிகள் கடவுளின் வாகனமாக இருக்கின்றன. இந்த வகையில் நாகங்கள் இந்து வழிபாட்டில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஜோதிட சாஸ்திரத்தில் சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்ற அமைப்பில் ராகு-கேதுவாக நாகங்கள் கிரக பரிபாலனம் செய்கின்றன.
இத்தகைய சர்வ வல்லமை படைத்த நாக தேவதைகளுக்கு ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி என்றால் நான்கு. இந்த நான்கு என்ற எண் அலைவரிசை எண் கணித சாஸ்திரப்படி ராகுவை குறிப்பதாகும். எனவே நான்காவது திதியான சதுர்த்தி அன்று வழிபடுவது மிகவும் விசேஷமாகும். நாகங்களை பற்றி பல புராண கதைகள், கர்ண பரம்பரை கதைகள், அனுபவ உண்மைகள் என ஏராளம் உள்ளது. நாகம் ஆலய வழிபாடுகளில் முக்கிய இடத்தை பெறுகிறது. அம்மன், சிவன், முருகன் ஸ்தலங்களில் நாக வாகன புறப்பாடு மிக விமரிசையாக நடக்கும்.
அதேபோல் திருப்பதி உள்ளிட்ட பெருமாள் ஸ்தலங்களில் சேஷ வாகனம் என்ற பெயரில் திருவீதி உலா நடப்பது விசேஷம். அம்மன் கோயில்களில் அரச மரம், வேப்ப மரம் இணைந்து இருக்க அங்கே பாம்பு புற்று வழிபாடு பிரசித்தமாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாம்பு புற்றுக்கு சந்தனம், மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து, அனந்தன், வாசுகி, கிஷ்காலன், அப்ஜன், மகரி, கங்குபாலன், கார்கோடன், குளிகன், பத்மன் ஆகிய நாக தேவர்களின் பெயர்களை உச்சரித்து புற்றுக்கு பால், முட்டை ஊற்றி வழிபடுவர். பல கோயில்களில் அம்மன்கள் நாக அம்சமாகவே அருள்பாலிக்கின்றனர்.
நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், காளியம்மன், மாரியம்மன் என ஒவ்வொரு ஊரிலும் பல விசேஷ பெயர்களில் வீற்றிருக்கிறாள் சக்தி. நாக சக்தியாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். இத்தலத்தில் மிகப் பெரிய புற்றுக் கோயில் உள்ளது. பாற்கடலில் பரந்தாமன் பாம்பு படுக்கையில் பள்ளி கொண்டிருப்பதாக விஷ்ணு புராணம் விவரிக்கிறது. புராண இதிகாசகங்களின்படி சமுத்திரத்தின் அதள பாதாளத்தின் கீழே பூமியை தாங்கியபடி ஆதிசேஷன் இருப்பதாக பாகவத புராணம் உள்ளிட்ட பல புராணங்கள் கூறுகின்றன. இதை சிலர் கட்டுக்கதை என்று சொல்வார்கள், ஆனால் நவீன விஞ்ஞான உலகத்தில் கடலுக்கு உள்ளே அதள பாதாளத்தில் ‘பாம்பு பாறை‘ இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஜோதிட சாஸ்திரப்படி நாகங்கள் ராகு, கேது என்ற பெயரில் கிரகங்களாக பரிபாலனம் செய்கின்றன. ராகு, யோக போகங்களுக்கும் கேது மோட்சம், ஞானத்திற்கும் அதிபதியாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமான திருமண விஷயத்திலும், குழந்தை பாக்யம் அருள்வதிலும் தோஷத்தை ஏற்படுத்துவது இந்த ராகு கேதுதான். நாக தோஷம், சர்ப்ப தோஷம் என பல வகைகளில் தோஷங்களை ஏற்படுத்துவதில் ராகு-கேதுவுக்கு நிகர் யாரும் இல்லை எனலாம். குழந்தை பிறக்கும்போது கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு பிறப்பது, கொடி சுற்றிக்கொண்டு பிறப்பது எல்லாம் ராகு-கேதுவின் வேலையாகும். இத்தகைய கடுமையான தோஷங்களை ஏற்படுத்தும் நாகங்களின் அம்சமான ராகு-கேதுவை நாக சதுர்த்தி தினத்தில் மனமுருகி வழிபட்டால் சகல தோஷ நிவர்த்தி ஏற்படும்.
புத்திரபாக்கியம், குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தி தரும் நாகபஞ்சமி விரதம்
ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது. ஒவ்வொரு மாதமும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல், சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும். ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்கு ஒரு வாரத்துக்குமுன், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த இரு பண்டிகைகளும், சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் இரு முக்கிய பண்டிகைகளாகும்.
சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது.
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர் முனிவர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.
இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.விரதம் கடைப்பிடிக்கும் போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்…
நன்மைகள் கோடி பயக்கும் நாகபஞ்சமி
மனிதன் இயற்கையை கண்டு அஞ்சினான். அதன் பிரம்மாண்டத்தை கண்டு வியப்பெய்தினான். அந்த அச்சத்தின் எச்சமே வழிபாடாக மாறியது. அதிக வெப்பத்தை கக்கிய ஆதவனை ஆண்டவனாகவே கருதினான் ஆதி மனிதன். இதுபோல் பேரலையால் ஆபத்தை உண்டு பண்ணும் கடலையும் கடவுளாக கருதினான். விஷம் கொண்ட விலங்கினங்களையும், உயிரை பறிக்கும் பலம் கொண்ட உயிரினங்களையும் உருவம் வைத்து வழிபட்டான். அந்த வழியில் வந்ததுதான் நாகர் வழிபாடு. அச்சம் மட்டுமே வழிபாடு ஆகாமல் அதனூடாக தத்துவார்த்தத்தையும் சேர்த்துக்கொண்டான்.
சிராவண மாதத்தில் (சாந்திராயன மாதம்) அதாவது தமிழ் மாதத்தின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் ஆடி மாத அமாவாசை கழிந்த ஐந்தாவது நாளான சுக்லபட்ச பஞ்சமியன்று நாகபஞ்சமி வருகின்றது. நாகர்கள் மற்றும் நாக தேவதைகளை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய நாடு முழுவதும் நடைபெறும் உற்சவமாகும். ஹேமாத்ரி என்ற ஸமஸ்கிருதத்திலிருந்து, எடுக்கப்பட்ட வரதராஜா என்ற பகுதியில், இந்த நியமங்களும், பூஜை புனஸ்கார முறைகளும் நாகராஜாவை முன்னிட்டு செய்ய வேண்டிய விதிகளும் விவரமாக சொல்லப்பட்டுள்ளன. ‘‘ஸ்ராவண மாதத்தின், சுக்லபட்ச பஞ்சமியன்று, வாசற்கதவின் இரண்டு பக்கமும் மாட்டுச்சாணியினால் மெழுகி, நாகராஜாவை வரவேற்கும் மிகவும் புனிதமான நாளாக சொல்லப்படுகிறது.’’
இதற்கு முந்தைய தினம், அதாவது சதுர்த்தியன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதமிருக்க வேண்டும். பஞ்சமியன்று இரவு மட்டும் தான் உணவு உட்கொள்ள வேண்டும். வெள்ளி, மரம், மண், மஞ்சள் அல்லது சந்தனத்தில் நாக உருவங்கள் அல்லது ஐந்து நாக உருவங்களை செய்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் முன் கோலமாக போட வேண்டும். பஞ்சமியன்று அவலும், பஞ்சாமிர்தமும் கொண்டு (அமிர்தமாக சொல்லப்படும் ஐந்து பொருட்கள் பால், தயிர்,நெய், தேன், சர்க்கரை) பூஜிக்க வேண்டும். அலரி புஷ்பங்களும், மல்லிகை செந்தாமரை பூக்களும், சந்தனப்பொடியும் மற்ற வாசனை திரவியங்களும் கொண்டு பூஜை செய்ய வேண்டும். மிகப் பிரசித்தமான நாகராஜாக்களான அனந்தன், சேஷநாகம். வாசுகி, கார்கோடகன் என்பவர்கள் இந்த தினத்தில் பூஜிக்கப்படுகின்றன. மற்ற எல்லா விழாக்களையும் போல, இந்துமத வழக்கப்படி மிகப்பெரிய அன்னதானம் நடைபெறும். அன்னதானம் இந்த நோன்பின் மிக பிரதானமாகும். அன்று விழா முடியும் வரை எங்கும், யாராலும் பூமி தோண்டப்படாதவாறு பக்தர்கள், கண்விழிப்பாக கவனித்து இருப்பர் நாகர்களை காக்க. என இவ்வாறு சிறப்பம்சங்களை கொண்ட நாக சதுர்த்தியில் அதற்கான பலன்களை பெற்று இன்பம் அடைவோம்.
0 கருத்துகள்
வீரபத்திரர் பற்றிய கதைகள் உங்களது கட்டுரைகள் கவிதைகள் எமது இணையத்தளத்தில் வர விரும்பின் எமது Gmail முகவரிக்கு உங்கள் பெயரை இட்டு அனுப்பி வைக்கவும்.