-->

ஆனி உத்தரம் தவற விடாதீர்கள்

ஆனி உத்தரம் சிறப்பு

நாளை 28.06.2020 ஆனி உத்தரம்


சிவாலயங்களில் நடராஜருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. 
  1. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று நடக்கும் ஆருத்திராதரிசனம் 
  2. மற்றொன்று ஆனி உத்திரம் நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம்.
இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். 

  1. மாசி பூர்வபட்ச சதுர்த்தசி
  2. சித்திரை திருவோணம் 
  3. ஆவணி பூர்வபட்ச சதுர்த்தசி
  4. புரட்டாசி பூர்வபட்ச சதுர்த்தசி
ஆகிய நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.


இவற்றில் குறிப்பாக மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனத் திருவிழாவும் சிறப்பாக பத்து நாட்கள் நடைபெறும். பங்குனி உத்திரத்தைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் மிக விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான விழாவாக, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றப்படுகிறது. 

பக்தர்கள் நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனித்திருமஞ்சனம் மிக நல்லநாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இளைஞர்கள் என அனைவரும் நாளைய தினம் நடராஜரைத் தரிசித்தால் மிக்க சிறப்பு. ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனத் திருவிழா இந்த ஆண்டு தமிழுக்கு ஆனி 5ஆம் நாள்(19.06.2020) தொடங்கி 14ஆம் நாள்(28.06.2020) வரை நடைபெறுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

திருமஞ்சன மகா அபிஷேகம்

திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது திருமஞ்சனம் என்பது பலவித வாசனை பொருட்கள் மற்றும் குளிர்விக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படுவதால் மங்கள நீராட்டு என்று அழைக்கப்படும்.

ஏனென்றால் ஈசனின் திருநட்சத்திரம் திருவாதிரை. மிக உஷ்ணமான நட்சத்திரம் அத்துடன் ஆலகாலம் உண்ட நீலகண்டன் அல்லவா ஈசன். சாம்பல் தரித்தவன். அக்னியை ஏந்திக் கொண்டிருப்பவன். ஆக மொத்தம் உஷ்ணம் மிகுந்து இருப்பவன். எனவே அவனுக்குக் குளிரக் குளிர மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்து குளிர்விப்பதே இதன் நோக்கம்.  இதனால்தான் சிவபெருமானை அபிஷேகப் பிரியன் என்று கொண்டாடுகிறோம். பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கின்றனர்.

நடராஜருக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்றும் ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், வளமும் கூடும் என்பது நம்பிக்கை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்