-->

கிருஷ்ணஜெயந்தி - கோகுலாஷ்டமி

செல்வ வளத்தையும் ஒற்றுமையையும் அருளும் கோகுலாஷ்டமி நாளை

கிருஷ்ண அவதாரம் ஜென்மாஷ்டமியின் (கிருஷ்ண ஜெயந்தி) வரலாறு - கிருஷ்ணர் ஏன் வெண்ணெய் திருடினார் தெரியுமா?

இந்த உலகத்தை காத்து ரட்சிக்கின்ற பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர்.


ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். அதோடு மகாபாரத போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை எனும் அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடும் சிறப்பு நாள் நாளை.

கிருஷ்ண ஜெயந்தி 2020 எப்போது?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் 2020ம் ஆண்டு செப்டம்பர் 9ம் திகதி அதாவது ஆவணி 24ம் தேதி (9.9.2020) அஷ்டமி திதியில் கிருஷ்ண ஜெயந்தி  கடைப்பிடிக்கப்படுகிறது.



கிருஷ்ணர் பிறந்த கதை

கிருஷ்ணர் கம்சனை அழிப்பதற்காகவும், மகாபாரதம் எனும் உன்னத காவியத்தில், நீதியை நிலை நாட்டுவதற்காகவும் அவதரித்தவர்.

பானாசுரன் மற்றும் நரகாசுரன் ஆகியோரின் பேச்சைக் கேட்டு மதுராவில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான் கம்சன். தன் தங்கையான தேவகிக்கும் வாசுதேவர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். அதன் பின் ஒரு அசரீரி மூலம்,“தேவகி, வாசுதேவர் ஆகியோருக்கு பிறக்கும் 8வது குழந்தை மூலம் நீ கொல்லப்படுவாய், கம்சனே உன் கொடுங்கோல் ஆட்சி முடிவடையும்.” என எச்சரித்தது.

அதனால் அதிர்ந்து போன கம்சன் தங்கை என்றும் பாராமல் வாசுதேவர் - தேவகியை சிறையில் அடைத்தான்.

அவர்களுக்கு பிறந்த 6 குழந்தைகளை கொன்றான். மஹாமாயா தேவியின் அருளால் தேவகியின் 7வது குழந்தையின் கருவை வசுதேவனின் மற்றொரு மனைவியான ரோகிணிக்கு மாற்றப்பட்டது. ரோகிணி பெற்றெடுத்த குழந்தைக்கு பலராமன் என பெயர் சூட்டப்பட்டது.


கம்சனை அழித்த கண்ணன்

இவர்களுக்கு 8வது குழந்தை பிறந்தது, இறைவனின் கட்டளைக்கு இணங்க கிருஷ்ணரை கோகுலத்தில் வாழ்ந்து வந்த நந்தகோபாலர் - யசோதையிடம் சேர்த்தார். அவர்களுக்கு பிறந்த துர்கா தேவியின் சொரூபமான பெண் குழந்தையை அங்கிருந்து தேவகியிடம் கொண்டு வந்து சேர்த்தார்.

தேவகிக்கு 8வது குழந்தை பிறந்ததை அறிந்த கம்சன் அங்கு வந்து அந்த பெண் குழந்தையை கொல்ல முயன்றான். அப்போது துர்க்கா தேவியின் வடிவெடுத்த அந்த பெண் குழந்தை. உன்னை கொல்லப்போகும் குழந்தை பிறந்துவிட்டது. அந்த குழந்தை கோகுலத்தில் இருக்கிறான் என எச்சரித்து சென்றார்.

அதன் பின் கிருஷ்ணன் தான் அந்த குழந்தை என அறிந்த கம்சன், குழந்தையை கொல்ல பல மாய சக்திகளை அனுப்பினான். ஆனால் பரந்தாமனை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்களை வைத்து பல லீலைகளை செய்து காண்பித்தார்.

இளைஞன் ஆனதும் மதுராவுக்கு வந்த கிருஷ்ணன், கம்சனை அழித்து அவனின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மக்களைக் காத்தருளினார்.


கோகுலத்தில் ஆயர்கள் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தனர். அவர்களின் முக்கியத் தொழில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தான்.

அப்படி இருக்க கம்சன் கொடுமையால் கோகுலத்தில் உற்பத்தி செய்யப்படும் பால், வெண்ணெய், தயிர் முதலானவை கம்சனுக்கு அளிக்க கட்டாயப்படுத்தினான்.

இதன் காரணமாக அதை உற்பத்தி செய்து வந்த கோபியர்களின் குழந்தைகளுக்கு கூட பால், வெண்ணெய் முதலானவை கிடைக்கவில்லை.

கிருஷ்ணர் கோகுலத்தின் செல்லக் குழந்தையாக இருந்ததால், அவர் வெண்ணெய்யைத் திருடி தான் உண்டதோடு, தன்னுடன் இருக்கும் நண்பர்களுக்கும் வெண்ணெய், தயிர், பால் ஆகியவற்றை பகிர்ந்து கொடுத்தார்.

அதன் காரணமாக கோகுலத்தில் இருந்த குழந்தைகள் உடல் வலிமை பெற்றதாக இன்னொரு கதை உள்ளது.


கொண்டாட்டம் 

கிருஷ்ணன் வெண்ணெய்யைத் திருடினான் என்ற குற்றச்சாட்டு தான் வைத்தான். ஆனால் அதன் மூலம் அவர்களுக்கு உடல் வலிமை கொடுத்ததோடு, அனைவரையும் ஒன்றுபடுத்தினான் என்று தான் சொல்ல வேண்டும்.

பின்பு கூட கிருஷ்ணன் வெண்ணெய் திருடாமல் இருக்க வெண்ணெய் நிறைந்த பானைகளை கயிரால் மேலே தொங்க வைக்கப்பட்டிருந்ததை எடுக்க தன் நண்பர்களோடு ஒரு பிரமிடு போன்ற அமைப்பை ஏற்படுத்தி வெண்ணெய்யை எடுத்து தானும், அவனது நண்பர்களும் தின்றனர்.

அதை நினைவுபடுத்தும் விதமாக இன்றும் கிருஷ்ண ஜெயந்தி அன்று பல நகரங்களில் மனித பிரமிடு எழுப்பி, மேலே கட்டி வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் பானை எடுக்கும் நிகழ்வு உறியடி என்ற பெயரில் மிக கோலாகலமாக நடைபெறும். இந்த நிகழ்வின் போது பல இளைஞர்கள் ஒற்றுமையுடன் ஒன்று கூடுவது வழக்கம்.


கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்ய சரியான நேரம்

அஷ்டமி திதி  9.9.2020 அன்று எமகண்டம், குளிகை, ராகு காலம் தவிர்த்து எப்போது வேண்டுமானலும் அபிஷேகம், பூஜை புனஸ்காரம் செய்ய உகந்த நேரமாகும். குறிப்பாக அந்த நாளில் வரக்கூடிய நல்ல நேரம், கெளரி நல்ல நேரம் மிகவும் உகந்ததாக பார்க்கப்படுகிறது.

நல்ல நேரம் 

காலை 4:34 முதல் 6:04 மணி வரை

மற்றும்

கெளரி நல்ல நேரம்

இந்த நேரங்கள் பூஜை செய்ய மிகவும் உகந்தது.


​கிருஷ்ண வழிபாட்டில் இடம்பெற வேண்டியது

கிருஷ்ணருக்கு வெண்ணெய் உட்பட இனிப்பு பலகாரங்கள் பிடிக்கும். அதனால் நம்மால் முடிந்த அளவு இனிப்புகளை செய்து வழிபடுவதோடு, பூஜையில் வெண்ணெய் இடம்பெறுவது அவசியம்.

அதே போல் குசேலனின் அன்பை அவர் கொண்டு வந்த அவல் மூலம் வெளிப்படுத்தினார். அதனால் எந்த ஒரு பலகாரத்தையும் செய்ய முடியவில்லை என்ற நிலை இருப்பவர்கள் கலங்காமல் பூஜையில் அவல், வெண்ணெய் வைத்தாலே கிருஷ்ண பரமாத்மா மனதார ஏற்றுக் கொள்வார்.


கிருஷ்ண தினத்தில் செய்ய வேண்டியது என்ன?

இந்த அற்புத தினத்தில் கிருஷ்ணரையே நினைத்து விரதமிருந்து அவரது நாமங்களை சொல்லுவதும், கிருஷ்ணர் குறித்த பாடல்கள் பஜனையாகப் பாடி வழிபடுவது வழக்கம்.

கிருஷ்ணர் அருளிய கீதை உபதேசத்தை பாராயணம் செய்யலாம்.


கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை நீ இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்து கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ

அது நாளை மற்றொருவருடையதாகிறது

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.









கருத்துரையிடுக

0 கருத்துகள்