வாழ்த்துச் செய்தி - பண்டிதர் த. இராசரத்தினம் இருபாலை அருள்மிகு கற்பக விநாயகர் தேவஸ்தானம் 2013

 வாழ்த்துச் செய்தி


மக்கட் பிறப்பினை மாண்புடையதாக்க வேண்டுமானால், சிந்தனையும் வந்தனையும் வேண்டும். மனிதன் என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றே இறைவனையும் வந்திக்கத் தொடங்கி விட்டான். அறிவினால் பொருளீட்டி, ஆசையினால் இறை இன்பம் நுகர்ந்து, செயலினால் அறம்புரிந்து வாழுதல் தனது முக்கிய கடனெனக் காணத் தலைப்பட்ட மக்கள், இறைவனுக்கு ஆலயம் கட்டி வழிபட முனைந்தனர்.

மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியே இறைவன். அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்கு ஆலயங்கள் கட்டி, விக்கிரகங்களில் எழுந்தருளச் செய்து வழிபடுவதே வழிபாடு, ஆதி மனிதர் நமக்கு நன்மை செய்பவற்றை வணங்கினர். சூரிய வணக்கம், அக்கினி வணக்கம் என்பன இந்தமுறையில் எழுந்தவையேயாகும். ஆனால் காலம் செல்லச்செல்ல மனித சிந்தனை விரிவடைந்து, ஒரு நாமம், ஓருரு, ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித்தொழும் மார்க்கம் எழுந்தது. இதன் பயனாகவே எங்கும் ஆலயங்கள் எழுந்தன. எங்கும் ஒலி அலைகள் பரவிக் கிடந்தாலும் அவற்றைச் சேகரித்து வெளியிட வானொலிப் பெட்டி தேவைப்படுவது போல அருள் வெளிப்பாட்டுக்கு ஆலயம் இன்றியமையாததாகும். "ஆலயந்தானும் அரனெனத் தொழுமே" என மெய்கண்ட தேவர் சிவஞானபோதத்தில் கூறியிருப்பதும் சிந்திக்கத் தக்கதே.

ஒரு ஊருக்கு உண்மை அழகையும் ஒளியையும் கொடுப்பன ஆலயங்களே. திருக்கோயில் இல்லாத ஊரை "அடவி காடே" என அப்பர் சுவாமிகள் பாடியிருப்பதும் சிந்தனைக்குரியதாகும். ஆலயங்களைக் கட்டி, கும்பாபிஷேக விழாக்களை எடுத்துத் தெய்வீகப்பணி செய்ததன் நோக்கமும் இதுவேயாகும். தற்போது வளர்ந்துவரும் விஞ்ஞானம், இயந்திரம் போன்ற வாழ்வு மக்களை அமைதிச் சூழலிலிருந்து எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. பாலைவனத்தின் நடுவே அமைந்த சோலைகள் போல ஆலயங்கள் யாவும் ஆன்ம கோடிகளுக்கு அருள் நிழல் காட்டும் கற்பகதருக்களாகும். ஆலயத் திருப்பணிகளிலே ஈடுபடுவோர் மாமனிதர் எனப் போற்றப்படுவர். மக்களை விலங்கு நிலையிலிருந்து விடுவித்து மேல் நிலைக்குக் கொண்டு செல்வது இப்பணியாகும்.

பத்திரகாளி சமேதரான வீரபத்திரப் பெருமான் கல்வியங்காட்டுப் பதியில் கோயில் கொண்டருளி பக்த கோடிகளுக்கு அருள்பாலித்து வருவதை யாவரும் அறிவர். எம்பெருமானின் திருவருள் கைவரப்பெற்ற அடியவர்களின் அயராத முயற்சியினால் இன்று ஐந்து தளத்துடன் இராஜகோபுரம் அழகுடன் காட்சி யளிக்கிறது. ஆலயத் திருப்பணியில் இராஜகோபுரம் முக்கியமானது. இக்கோபுரம் தூலலிங்கமென அழைக்கப்படும்.

இதிகாச புராணங்களை நினைவூட்டும் வகையில் இக்கோபுரத்தில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. கலைமேவும் தலைவாசலாக ஆலயத்துக்குக் கோபுரம் விளங்குகின்றது. இராஜ கோபுரம் கட்டுவதென்றால் இலகுவான செயலல்ல. தெய்வீகத்தோடு ஆன்மபலமும் இணைந்தே இப்பணியைச் செய்யமுடியும். அந்தவகையிலே இந்த அரிய பெரிய கைங்கரியத்தைச் செய்து முடித்து, இன்று கும்பாபிஷேகம் நிகழ்த்தும் ஆலய நிர்வாகிகளுக்கும் அடியார்களுக்கும் பத்திரகாளி சமேதரான வீரபத்திரப் பெருமான் அருள்பாலிப்பாராக.

இன்று தைத்திங்கள் பதினேழாம் நாள். இப்பதியின் பொன்னான நாள். மூலமூர்த்திக்கும் இராஜகோபுரத்துக்கும் ஒன்றாகக் கும்பாபிஷேகம் நடைபெறக் கிடைத்த தெய்வீக நாளாகும். அத்துடன் இவ்விழா மணக்கப் பக்திப் படையல்களுடன் ஒரு சிறப்பு மலர் வெளிவருவது பாராட்டுதற்குரியது. இப்பெரும் பணியைச் செய்து மக்களின் மனங்களைக் குளிரவைத்த ஆலய நிர்வாகத்தினர்க்கும், விழாவில் கலந்து சிறப்பிக்கும் அடியவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகள். எல்லாம்வல்ல எமது இருபாலை அருள்மிகு கற்பக விநாயகப் பெருமானின் திருவருட்கடாட்சம் அனைவர்க்கும் கிடைக்க வேண்டுமென அகமகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க.


பண்டிதர், சைவப்புலவர் த. இராசரத்தினம் 
இருபாலை அருள்மிகு கற்பக விநாயகர் தேவஸ்தான 
திருப்பணிச் சபையின் காப்பாளர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்