இராஜகோபுரம் தொழுவோம்

இராஜகோபுரம் தொழுவோம்


கோயில்கள் தமிழர் பண்பாட்டின் சின்னங்களாகும். அடியார்களின் உள்ளத்தை முதலில் கவர்வது திருக்கோயில்களில் காணப்படும் இராஜ கோபுரங்களேயாகும். தஞ்சாவூர் பெருங்கோயிலிற் காணப்படும் இராஜகோபுரத்தைக் கட்டுவித்த இராஜ இராஜ சோழ மன்னனின் பெரும்புகழ் வரலாற்றுப் பெருமை வாய்ந்தது அல்லாமலும், தமிழரின் ஆற்றலை வெளிப்படுத்துவதும் ஆகும். உத்தம மன்னர்கள் பரம்பொருளின் உண்மையை உலகிற்கு உணர்த்த எடுத்த பெரும் முயற்சிகளே இத்தகைய கோபுரங்கள்.

கோபுரங்களைக் கண்டதும் பக்திப்பரவசம் ஏற்படுகின்றது. கோயிலுக்குக் கோபுரம் அழகையும் கவர்ச்சியையும் தந்து நிற்கின்றன. கோபுரத்தைக் கண்டதும் ஆண்டவனுடைய எண்ணமே உள்ளத்தில் எழும். ஊருக்கு அழகு கோயில், கோயிலின் சிகரமாய் கோயிலை அணிபெறச் செய்வது கோபுரம். கோபுரமாகிய தூல லிங்கத்தின் திருவுரு தெளிய, திருவருள் பொலிய, அடியார்களை மெய்மறக்கச் செய்வது கோபுரம்.

அந்தவகையில் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாண்ட சங்கிலி மன்னன் காலத்தில் இப்பிரதேசத்தைச்சூழப் பல கோயில்கள் எழுந்து இப்பிரதேசத்திற்கு அழகையும், பொலிவையும் வழங்கின. நல்லூரை அண்டியுள்ள கல்வியங்காடும் பல திருத்தலங் களைத் தன்னகத்தேகொண்டு, அழகையும், பொலிவையும் கொண்டு திகழ்கின்றது.

தமிழ் மன்னர்களின் வழியில் கல்வியங்காடு - பிரதேச மக்கள் பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் ஆலயத்திற்கு இராஜகோபுரம் அமைத்து, கும்பாபிஷேகம் செய்வது எமது கலைபண்பாட்டைத் தொய்யவிடாது, பக்தியையும் வளர்க்கும் ஒரு அற்புதச் செயற்பாடாகும். இத்திருக்கைங்கரியத்தில் ஈடுபட்ட அனைவரும், தமிழுக்கும் சைவத்திற்கும் செய்யும் சேவைக்காக இறையருள் பெற்று எம் இனம் மகிழ்ச்சி பொங்க வாழ வழிகாட்டும் மெய்யடியார்கள் என்றால் மிகையல்ல.


கோபுரத்தின் அத்திவாரம் மிகவும் ஆழமானதும் உறுதியுமானதுமாகும். மேலே செல்லச்செல்ல அது ஒடுங்கிச் செல்கின்றது. அவ்வமைப்பு ஆண்டவன் "ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்" என்பதனைப் பறைசாற்றுகின்றது அல்லாமலும் அக்கோபுரங்கள் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளையும் தாங்கி நிற்கின்றன. புராண வரலாற்றுக் கதைகளைச் சிற்பச் சிலைகள் காட்டிய வண்ணம் கோபுரத்தில் ஒட்டி உறவாடி நிற்கின்றன.

கும்ப - அபிஷேகம் என்பதன் பொருள் "குடத்து நீரை ஆட்டுதல்" என்பதாகும். அதாவது செம்பு, பித்தளை, வெள்ளி, தங்கம் இவற்றால் செய்யப்பட்ட குடம், செம்பு முதலியவற்றில் நீரை வடிகட்டி நிறைத்து வாசனைப் பொருள்கள், பொற்றகடு, காசு முதலியவற்றை அந்நீரிலிட்டு மேலே மாவிலை, தேங்காய், துணி முதலியவற்றைச் சாத்தி, அலங்கரித்து, அதில் இறைவனை ஆவாகனம் செய்து வணங்கி, அக்கினியை உண்டாக்கி முறையாக ஓமம் செய்து அக்கும்பத்தினால் மூர்த்தியை அபிஷேகம் செய்தலாகும்.

கும்பாபிஷேகத்தின்போது நிகழ்கின்ற கிரியைகள் ஒவ்வொன்றும் தத்துவ அடிப்படையிலமைந்தவை என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கும்பாபிஷேகக் கிரியைகள் அனைத்தும் எங்கும் பரந்துள்ள இறைவனைத் திருக்கோயிலிலும், திருவுருவத் திலும் வெளிப்பட்டு நின்று திருவருள் புரியுமாறு வேண்டிக் கொள்ளும் பான்மையில் அமைந்ததாகும்.

இத்தகைய உயர்ந்த தத்துவ அடிப்படைகள் பலவற்றைக் கொண்டு நடைபெறும் கும்பாபிஷேக விதிமுறைகள் இறைவனாலேயே அருளப்பெற்றன என்பர். சைவ ஆலயங்களில் இச்சிறப்பு மிக்க கும்பாபிஷேகம் நடைபெறுவது, எல்லா உயிர்களுக்கும் இறைவனது திருவருள் எளிதில் கிட்டுமாறு செய்ய வழி செய்வதாகும். அவ்வுயர் எண்ணம் சித்திக்க இறையருள் வேண்டி, மீண்டும் ஒருமுறை இதற்காய் உழைக்க இறையருள் பெற்றவர்களை வாழ்த்தி வணங்குகின்றேன்.


ஈ. சரவணபவன்

நாடாளுமன்ற உறுப்பினர்.

யாழ் மாவட்டம்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்