ஆன்மீக நெறியில் அறப்பணி வளர்க

 "ஆன்மீக நெறியில் அறப்பணி வளர்க"


"செம்மலர் நோன்றாள் சேரவொட்டா 

அம்மலங்கழீ இ அன்பரொடு மரீ இ

மாலறநேயமும் மலிந்தவர் வேடமும் 

ஆலயந்தானும் அரனெனத் தொழுமே"


என்பது சிவஞானபோத சூத்திரம். இறைமகிழ் இல்லாக விளங்கும் ஆலயங்கள் மக்கள் ஆன்மீக வழிகாட்டலுக்கும், சமூக மேம்பாட்டுக்கும் பண்பாடு, கலை கலாசார நெறிகளை வளர்க்கும் ஸ்தாபனங்களாகவும் விளங்குகின்றன. தத்துவத்தை ஆகமத்தின் மூலம் நன்கு உணர்ந்தும் சிற்ப சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் தரிசன மூலம் சகல பாக்கியங்களையும் அடையமுடியும்.

அத்தகைய திருவுடைய ஆலயங்களிலொன்றாக விளங்கும் கல்வியங்காடு பத்திரகாளி அம்பாள் உடனுறை வீரபத்திர சுவாமி கோவில்  திருப்பணிச்சபையினர் பஞ்சதள இராஜகோபுரத்தை அமைத்துச் சிறந்த திருப்பணியை நிறைவேற்றியுள்ளனர்.

"கோலக் கோபுர கோகரணஞ்சூழாக் கால்களால் பயனென்" எனத் திருவங்கமாலையில் கோபுர வழிபாட்டின் பெருமையை எடுத்துக்கூறியுள்ளார்.

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது முதுமொழி.
கோபுரத்தின் வாயில்கள் ஐந்தாக இருப்பது ஐம்பொறிகளை உணர்த்துவதாகவுள்ளதைக் காணலாம். கோபுரங்கள் மத்ய, பூர்வ, தஷிண, பச்சிம, உத்தரதிக்குகளில் அமைக்கப்படும். அதனை பஞ்ச கோபுரங்கள் என சிற்ப நூல்கள் எடுத்தாள்கின்றன.


மேலும், கோபுரங்கள் மூலம் ஆலயவரலாறு. இறையின் அருட் காட்சித் திருவிளையாடல்களைக் காணமுடிகின்றது. மூல மூர்த்தியாக விளங்கும் இறைவனைக் கோபுரம், விமானம், துவாரபாலகர், பிரகாரம் இவற்றைத் தாபித்தல் வேண்டுமென வழிபாட்டின் முறைமையைப் புராணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.


நமது கலைகள் யாவும் கோவில்களோடு வளர்ந்துள்ளன. எனவே சிற்பக் கலைக்குப் புத்துயிர் கொடுத்துப் பண்டைக்காலச் சிற்பச் சிறப்பைப் பாதுகாக்க முன்வருதல் அவசியம்.

வீரபத்திரப் பெருமானின் திருவருள் அனைவர்க்கும் கிடைக்கப் பிரார்த்தித்து இத்தகைய பெரும்பணிகள் சிறந்து ஆன்மீக வாழ்வு சிறக்க ஆசிகூறுகின்றேன்.

”மேன்மைகொள் சைவநீதி 

விளங்குக உலகமெலாம்"



வேதாகம கிரியாபானு சிவஸ்ரீ. சோ. இ. பிரணதார்த்திஹரக்குருக்கள்.

வீரபத்திரர் கோவில், கோப்பாய்.

தலைவர்.

வலி.கிழக்கு சைவசமய அருள்நெறி மன்றம், கோப்பாய்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்